தமிழர் விஞ்ஞானம் (பகுதி 1)
தமிழ் வணக்கம்!!!
இன்று நாம்
படித்து வியந்த பல அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் பல நூறு வருடங்களுக்கு
முன்னரே, பழந்தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது
வருங்கால சந்ததியினர் பயன்பெறுவதற்காக, இலக்கியங்களிலும்,
இலக்கணங்களிலும், தமிழ் செய்யுள்களிலும் புகுத்தி
பாதுகாத்துள்ளனர். எத்தனை எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆயிரம் ஆயிரம்
வருடங்களுக்கு முன்னரே, தமிழர்கள் உலகத்துக்கு அளித்துள்ளனர்
என்பதை நாம் மறந்தோம். அவற்றுள் சிலவற்றை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ்
இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்: பழந்தமிழரின்
வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம் வரை அறிவியல் பரவிக்கிடக்கிறது. இலக்கியம் என்பது
வெறும் ரசனைக்குரிய ஒன்றாக மட்டுமல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே
ஆக்கப்பட்டுள்ளது. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி
வருகின்றன. இதனை பல தமிழ் சங்க இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. அவ்வை
திருக்குறளின் பெருமையை உரைக்கும்போது, அணுவைப் பிளந்து
ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் என்கிறார். அணு என்பது கண்களுக்குப்
புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும்,
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவ்வை, அதனை
அறிந்திருந்ததும், அணுவை பிளப்பது குறித்து பாடலில் கூறி
இருப்பதும், வியப்பிற்குரியது.
அடுத்ததாக பழந்தமிழரின் மருத்துவ அறிவியலுக்கான சான்றைக் காண்போம். இன்றைய மருத்துவ உலகம், மனிதனைக் காப்பாற்ற மரணத்தின் வாயில் வரை செல்கிறது. புதிய உயிர்களையும், உறுப்புகளையும் உருவாக்கும் அளவிற்கு மருத்துவ உலகம் வளர்ந்து விட்டது. ஆனால், மருத்துவ படிப்புகளோ, செய்முறை பயிற்சிகளோ இல்லாத அந்த காலகட்டத்திலும், சித்தர்களும், சிறந்த வைத்தியர்களும் வாழ்ந்துள்ளதை தமிழ் இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன.
மாதா உதிரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதிரத்தில் வாய்த்த குழவிக்கே
திருமூலர்
இயற்றிய இப்பாடலைக் கேட்கும்போது,
தாயின் உத்திரத்தில் அழுக்கு மிகுந்தால், பிறக்கும்
குழந்தை மந்தபுத்தி உடையதாகவும்,
நீர் மிகுந்தால், குழந்தை ஊமையாகவும், அழுக்கு, நீர், இரண்டும்
மிகுந்தால், குழந்தை குருடாக பிறக்கும் என்ற கருத்துகள், இப்பாடலில்
கூறப்பட்டுள்ளது.
பழுதுபட்ட ஒரு உறுப்பை எடுத்துவிட்டு, வேறொரு உறுப்பை பொருத்துதல் என்பது, இன்றைய மருத்துவ உலகின் சாதனை. இது பற்றிய ஒரு குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது.
நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
ஆடு மழைத் தடக்கை யறுத்து
முறைசெய்த பொற்கை நறுந்தார்ப்
புனைத்தேர்ப் பாண்டியன்
இப்பாடலின்
கூற்று படி, கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்கு தண்டனையாக, தன் கையை தானே
துண்டித்துக் கொள்கிறான் பாண்டியன். அதன்பின், பொன்னாலாகிய கையை செய்து வைத்துக்கொண்டான்.
அன்றிலிருந்து அவன் பொற்கைப் பாண்டியன் என்று அழைக்கப்படுகிறான். இது போன்று பல
சான்றுகள் தமிழ் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இவை அனைத்தையும்
பார்க்கும்போது, இன்றைய மருத்துவ முறையின், நவீனமான சிகிச்சைகள் அனைத்தும், பல
நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழரால் கையாளப்பட்டு வந்துள்ளன என்பது பெருமை கொள்ளச் செய்கின்றன.
தமிழ் சார்ந்த தேடல், தமிழுக்கான தேடல்!
- சங்கேத் & கிஷோர்




கருத்துகள்
கருத்துரையிடுக