பழந்தமிழ் ஆயுதங்கள் (பகுதி 1)
தமிழ் வணக்கம்!!!
பண்டைய
தமிழர்கள், அறிவில் சிறந்தவர்கள் - வீரத்தில்
திளைத்தவர்கள். இன்று நாம் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்கள், அன்றே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில்,
சில நாடுகளுடன் போரிட பல ஆயுதங்கள் தேவைப்படுகிறது. ஆனால், அக்காலகட்டத்தில், பல நாடுகளைக் கைப்பற்ற சில ஆயுதங்கள்
மட்டுமே தேவைப்பட்டன. அவ்வாயுதங்கள், நுண்ணறிவோடும்,
சரியான கணக்கீடோடும், வடிவத்தோடும் செய்யப்பட்டன. அவை குறி
தவறாமல் இலக்கை அடைந்தன. அவற்றுள் நாம் அறியாத சில ஆயுதங்கள் பற்றி இன்று நாம்
காணவிருக்கிறோம்.
வளரி ஒரு வீசு
வகை ஆயுதம். இது போர்காலங்களிலும், கால்நடைகளை வேட்டையாளர்களிடமிருந்து
காப்பாற்றவும் பயன்படுத்தப்பட்டன. இவை புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வளரியின் ஒரு முனை உருண்டையாகவும், மற்றொரு முனை தட்டையாகவும்
கூர்மையாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் இரும்பினால் செய்யப்படுகிறது. இது
பொதுவாக வீசும் போது சுழலும். ஆனாலும், வீசுபவர்
இவ்வாயுதத்தின் இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும். இவை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் சுழலக்கூடியது. இவ்வாயுதம் கொண்டு ஒருவரைக் கொல்ல,
அவரின் கழுத்து இலக்காக வைக்கப்படுகிறது. ஒருவரை சிறைபிடிக்க அவரின்
கணுக்கள் மற்றும் முழங்கால்கள் இலக்காக வைக்கப்படுகிறது.
அடுத்து
சென்றெறி சிரல். இது ஒரு கையம்பு வகை ஆயுதம். இவை இப்போது நாம் பயன்படுத்தும்
கையெறி குண்டுகளைப்போன்றது. போரில், எதிரிகள் மிக
அருகில் வந்துவிட்டால், வேறு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தி
குறிவைத்து தாக்க முடியாது. அச்சமயத்தில், இவ்வாயுதம்
கொண்டு எதிரிகளை மிக விரைவாக வீழ்த்திவிடலாம். மேலும், இது
உளவு பார்ப்பவர்களை கண நேரத்தில் கொல்ல பயன்படுத்தப்பட்டது.
பூங்கருவி - இது
உளவு பார்த்தல் மற்றும் அரச ஒற்றர்கள் பயன்படுத்தும் ஒரு ஆயுதம். இவ்வாயுதத்தின்
ஒரு முனையில் வாய் வைத்து ஊதினால், மறுமுனையில், கணை
ஒன்று வெளிப்படும். இது கழுத்தை
இல்லக்காகக் கொண்டு எதிராளியின் உயிர் பறிக்கும் ஓர் ஆயுதம்.
கள்ளகத்தி - இது
ஒரு வகை கத்தி. இதை ஒரு கைத்தடியில் மறைத்து வைக்க முடியும். இதன் உயரம் சுமார் 5
அடி ஆகும். போரில் எதிர்பாராத வேளையில், கையில்
ஆயுதம் இல்லா சமயத்தில், மறைத்து வைக்கப்பட்ட இவ்வாயுதம்
பயன்படும்.
கைப்பெயர் ஊசி -
இது ஒரு வீசு வகை ஆயுதம். இது மதில் மேல் வைக்கப்பட்டிருக்கும், அல்லது மதில் மேல் இருந்து வீசப்படும் ஓர் ஆயுதம். ஒருவேளை எதிரிகள்
மதில் மேல் எறி, மதிலின் உச்சியைப்பிடிப்பவர் இதன் மேல்
கை வைத்தால் இது அவர்களின் கையினைக் கிழித்துவிடும்.
இவை அனைத்தும்
சொற்ப ஆயுதங்களே. இன்னும் நாம் அறியாத பல நூறு ஆயுதங்கள் இருக்கின்றன.
இவ்வாயுதங்கள் பற்றி நாம் அறிந்தாலும், அவற்றை
பயன்படுத்தும் விதத்தில், பழந்தமிழர்களை மிஞ்ச எவராலும்
முடியாது.
தமிழ் சார்ந்த தேடல், தமிழுக்கான தேடல்!
- சங்கேத் & கிஷோர்







கருத்துகள்
கருத்துரையிடுக