திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்
தமிழ் வணக்கம்!!!
திருமணம் என்பது
ஆயிரம் காலத்து பயிர். அது இரு மனங்களுக்கு இடையே அன்பை பரிமாறிக்கொள்ளும் தருணம்.
மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை.
பரிமாறப்பட்ட அன்பு தனது வாழ்க்கையின் புதிய பயணத்தை துவக்குகிறது. அவ்விரு
மனங்களின் வாழ்க்கை பயணம் பல இடர்களை சந்தித்தும் இணைபிரியா அன்போடும்
ஆனந்தத்தோடும் ஓரிடத்தில் நிற்கிறது. தனது திருமண வாழ்க்கையை திரையிட்டு காட்டும்
ஒரு தன்னிகரில்லா தருணம் - அறுபது, எழுபது, எண்பதுகளில்
நிகழும் மணவினை.

அம்மணவினை
யாகங்கள் கொண்டு பல கோவில்களில் நடத்தப்படுகிறது. அக்கோவில்களில் ஒன்று
மிகச்சிறப்புடையது. இங்கு திருமண யாகம் நடத்தப்பட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்
என்றொரு நம்பிக்கை. அது நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூரில்
உள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலைப் பற்றி இன்று நாம்
காணவிருக்கிறோம்.
இக்கோவில் எட்டு
வீரட்டங்களுள் ஒன்றாகும். வீரட்டம் என்பது வதம் செய்வதை குறிக்கும் சொல். தேவாரப்
பதிகம் பெற்ற காவிரி தென்கரைக் கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் சோழ மன்னனால்
9 ஆம் நூற்றாண்டில் திராவிட கட்டிடக்கலையை
பின்பற்றி கட்டப்பட்டு, பின்பு விஜயநகர மன்னரால்
புதுப்பிக்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள 54 கல்வெட்டுகள்,
சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள்
செப்பணிட்டு செய்த சீரமைப்பு பணிகளைக் குறிப்பிடுகிறது.
இக்கோவிலின்
மூலவர் அமிர்தகடேஸ்வரர் என்றும் அமிர்தலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இப்பெயருக்கு பின் ஒரு புராணக்கதை உண்டு. பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள் விநாயகரை வணங்காமல் அதை உண்ணச்
சென்றனர். ஆகையால் விநாயகர் அதை மறைத்து வைத்துவிட்டார். பின்னர் விநாயகரை வணங்கிய
தேவர்கள் அமிர்த கலசத்தை பெற்று வழிபடுவதற்காக வைத்தனர். அப்போது அமிர்த குடம்
இருந்த இடத்தில் சுயம்புலிங்கம் உண்டானது. அமிர்தத்தில் இருந்து தோன்றியதால்
அமிர்தகடேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது.
இக்கோவில் இங்கு
தோன்றியதற்கு பின்னாலும் ஒரு புராணக்கதை உண்டு. சிவன் பிரம்மனுக்கு உபதேசம் அளித்த
இடமாதலால் இங்கு கட்டப்பட்டது. சுயம்பு மூர்த்தியாக உள்ள இக்கோவிலின் மூலவர் ஒரு
லிங்கம் தான் என்றாலும் அதை உற்றுப்பார்க்கும் போது பின்னால், இன்னொரு லிங்கம் பிம்பமாகத் தெரியும். இக்கோவிலின் உற்சவர் கால
சம்ஹார மூர்த்தி ஆவார். காலனைக்கொன்று மார்க்கண்டேயனை காப்பாற்றியதால் இப்பெயர்
பெற்றார். உற்சவர் காலனைக் கொள்வது போல காட்சி அளிக்கிறார்.
அறுபது, எழுபது, எண்பதுகளின் மணவினை திருக்கடையூர்
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மட்டுமல்லாமல் மற்றொரு கோவிலிலும் வழிபாடு செய்தால்
முழுமை பெரும் என்பது நம்பிக்கை. அக்கோவில் திருக்கடவூர் மயானம் என்றும்
மெய்ஞ்ஞானம் என்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது
திருக்கடையூரில் இருந்து சுமார் 2 km தொலைவில்
அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர்
பிரம்மபுரீஸ்வரர் ஆவார். இப்பெயருக்கு பின் ஒரு கதை உண்டு. இந்து புராணத்தின் படி,
சிவன் பிரம்மாவை ஐந்து முறை ஐந்து இடங்களில் அழித்து இருக்கிறார்.
இது போன்ற சம்பவம் ஒரு கர்ப இடைவெளியில் நடந்துள்ளது. ஒரு கர்பம் என்றல் ஒரு இலட்ச
வருடங்கள். இந்த இடங்கள் மயானம் என்று அழைக்கப்படுகிறது. அவை காசி மயானம், கச்சி மயானம், திருக்கடவூர் மயானம், கழி மயானம், வீழி நல்லூர் மயானம்.
இக்கோவில் சிவன்
பிரம்மனை அழித்து உயிர் கொடுத்த இடம் மட்டுமல்லாமல் பிரம்மன், சிவனிடமிருந்து ஞானம் பெற்ற இடமும் இதுதான். அக்கரணத்தால் இது
திருமெய்ஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. மார்கண்டேயனுக்காக சிவனால் அமைக்கப்பட்ட
ப்ரம்ம தீர்த்த கிணறு இங்கு உள்ளது. இங்கிருந்துதான் தினமும் திருக்கடையூர்
அமிர்தகடேஸ்வரர் பூஜைக்காக நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நீர் வேறு எந்த
கடவுளுக்கும் பயன்படுத்தப்படாது. ஒரு முறை அரசன் ஒருவன் இந்நேரைக்கொண்டு
பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தான். அந்நீர் லிங்கத்தின் மேல் விழுந்த கணம்
விரிசல் விழத் தொடங்கியது. அவ்விரிசல் இன்றளவும் காணப்படுகிறது.
அக்காலத்தில்
வாழ்ந்த எம்கேரிடன் எனும் சாளுக்கிய மன்னன் போரில் தனது நாட்டை இழந்தான். சிவ
பக்தன் ஆதலால் அனைத்து சிவகோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தான். இக்கோவிலில்
வந்து சிங்காரவேலரை வழிபாடு செய்த போது அவர் உதவ முன் வந்தார். அவர் சாளுக்கிய
மன்னன் வேடம் தரித்து நாட்டை திரும்பப் பெற்றுக்கொடுத்தார். மன்னன் மனமுருகி 53 ஏக்கர் நிலத்தை இக்கோவிலுக்கு தனமாக வழங்கினார் என்று
கூறப்படுகிறது. இந்நிலங்கள் இன்றளவும் சிங்காரவேலி என்ற பெயரோடு அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில்
இக்கோவிலில் தான் முருகர் வில் அம்போடும், ருத்திராக்ஷ
மாலையோடும், காலணி அணிந்தும் காட்சி அளிக்கிறார்.
பொதுவாக விநாயகர் பெருவயிறோடு தான் காட்சி அளிப்பார். ஆனால் இங்கு ஒட்டிய வயிறுடன்
பிரணவ விநாயகராக காட்சியளிக்கிறார். இதற்கான காரணம், சிவன்
பிரம்மனுக்கு ஞானம் வழங்கியபோது விநாயகர் பின்னின்று கேட்டதாக நம்பப்படுகிறது.
முருகனை போல விநாயகருக்கும் அறுபடை வீடு உண்டு. அதில் இக்கோவிலும் ஒன்று.
நம்
வாழ்க்கையில் நடக்கும் அறிய நிகழ்வான அறுபது, எழுபது,
எண்பதுகளின் மணவினை, அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டு
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வழிபட்டு சென்றால் வாழ்நாள் நீடிக்கும் என்பது
நம்பிக்கை. வாழ்வில் அனைவரும் சிறப்பான தருணத்தை சிறப்பான கோவிலில் நடத்தி
சிறப்பு பெற வேண்டுகிறோம்.
தமிழ் சார்ந்த
தேடல், தமிழுக்கான
தேடல்!
- சங்கேத் & கிஷோர்









கருத்துகள்
கருத்துரையிடுக